தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற திட்டம்: பரபரப்பான சூழலில் டெல்லி புறப்பட்டு சென்றார் கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற டெல்லி தலைமை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும், 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றை தனது தலைமையில் சந்தித்து, கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். சத்தியமூர்த்தி பவனில் ஒரே ஒருமுறை மட்டுமே கோஷ்டி சண்டை நடைபெற்றுள்ளது. அதனால் டெல்லி தலைமையும், அழகிரியை மாற்றும் விவகாரத்தில் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னும் 9 மாதங்களில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தயாராகவும், மாநிலம் முழுவதும் கட்சியை தயார்படுத்தவும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவும், அதற்காக புதிய தலைவரை நியமிக்கவும் டெல்லி தலைமை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார், முன்னாள் எம்.பி.பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர் இடம்பெற்ற பட்டியலை டெல்லி தலைமை தயாரித்து இருப்பதாகவும், தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாகவும், தலைவராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருப்போர் குறித்து கருத்தறியவும், கே.எஸ்.அழகிரியை டெல்லி தலைமை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அழகிரி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்துவிட்டு பின்னர் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் தலைவர் பதவி மாற்றம் இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE