கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை குறைப்பதா? - அரசாணையை திரும்பப் பெற அண்ணாமலை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைக்க கூடாது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சிதிலமடைந்த 10 ஆயிரம் அரசுப் பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப் போவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்று, பணி நியமனத்துக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

மேலும், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, தமிழக பள்ளிகள் அணிதேர்வு செய்யப்படாமல் இருந்துவருகிறது. தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது, ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு. ஆனால், மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாதவாறு திமுக அரசு வஞ்சித்து வருகிறது. இவ்வாறு தனது மெத்தனப் போக்கால் ஏழை,எளிய மாணவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தமிழக அரசு கோட்டைவிடுகிறது.

இந்த நிலையில், இதில் உச்சகட்டமாக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

கடந்த 2021 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை, தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.3,767 கோடி நிதி வழங்கியுள்ள நிலையில், ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியை திமுக அரசு பெருமளவு குறைத்திருக்கிறது. இதனால், எஞ்சிய கட்டணத்தை பெற்றோரிடம் வசூலிக்க பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது.

திமுகவினர் நடத்தும் தனியார்கல்வி நிறுவனங்கள் பயனடைவதற்காக, ஏழை மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர வாய்ப்புகளை சிதைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பாதிக்கிற வகையிலான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற்று, ஏழைமாணவர்களுக்கு தரமான கல்விகிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்