5 ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை - பெரம்பூர் அருந்ததியர் நகரில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்

By செய்திப்பிரிவு

சென்னை: பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததியர் கர் பகுதியை சேர்ந்த வாசகர் சி.பி.பரந்தாமன், 'இந்து தமிழ் திசை' நாளிதழின் பிரத்தியேக புகார் அழைப்பு எண்ணான உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்புகொண்டு தெரிவித்ததாவது:

சென்னை மாநகராட்சி,திரு.வி.க.நகர் மண்டலம், 71-வது வார்டு, பெரம்பூர் மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர் பகுதியில் 16 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செங்கன் தெரு, கந்தன் தெரு, வீரராகவன் தெரு, பிச்சாண்டி சந்து, கோவிந்தன் தெரு ஆகியவற்றில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த குடிநீர், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் ஏழை மக்கள் என்பதால், இவர்களுக்கு பணம் செலுத்தி குடிநீர் வாங்கும் வசதி இல்லை. கிடைக்கும் அசுத்தமான நீரையே காய்ச்சி குடித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்திடமும், திரு.வி.க.நகர் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவியிடமும் கடந்த 5 ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகிறோம்.

குடிநீரில் கழிவுநீர் வருவதை கண்டித்து சாலை மறியலும் செய்துள்ளோம். தாயகம் கவி 2-வது முறையாக வெற்றி பெற்றவுடன், எங்கள் பகுதி சார்ந்த 19 கோரிக்கைகள் இடம்பெற்ற மனுவை அவரிடம் அளித்தோம். அதில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்சினையும் ஒன்றாகும். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அங்கு புதியகுழாய் பதிக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வருகின்றனர். ஆனால் எந்த பணிகளையும் தொடங்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்தின், திரு.வி.க.நகர் பகுதி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அப்பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக குடிநீர் லாரிகள் மூலம் தெருக்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அங்கு ரூ.3 கோடியில் புதிய குடிநீர் குழாய்களை பதிக்கவும் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், மழை முடிந்த பிறகு, குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE