டாஸ்மாக் இல்லாத தீவாகிறது ராமேசுவரம்!

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், ராமேசுவரம் தாலுகாவில் இருந்த 11 டாஸ்மாக் கடைகளில் 8 மூடப்பட்டன. 3 கடைகள் மட்டும் பாம்பனுக்கு மாற்றப்பட்டன.

இதனால் ராமேசுவரம் நகராட்சி டாஸ்மாக் இல்லாத நகராட்சியாக உள்ளது. ஆனால் மாற்றப்பட்ட மூன்று மதுக்கடைகளும் பாம்பன் ரயில் நிலையம், உள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் அமைந்ததால், அங்கு தினந்தோறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளும், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.

மேலும் சிலர் பாம்பனில் உள்ள மதுக்கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்கத் தொடங்கினர். இதனால் பொதுமக்களும், பல்வேறு இயக்கத்தினரும் 3 மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், ராமேசுவரம் தாலுகாவில் புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தினர்.

பாம்பன் கிராமசபைக் கூட்டத்திலும் இந்த மதுக்கடைகளை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் 3 மதுக்கடைகளில் ஒன்று மட்டும் மூடப் பட்டது. இந்நிலையில் இது குறித்து “இந்து தமிழ் திசை”யின் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட சங்கீதா கூறுகையில், சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ஜுன் 22 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல் நாடு முழுவதுமிருந்து ஆன்மிக பக்தர்கள் அதிகளவில் வரும் ராமேசுவரம் தீவிலுள்ள எஞ்சிய மதுக் கடைகளையும் மூடிவிட்டு, அப்துல்கலாம் பிறந்த ராமேசுவரத்தை மது இல்லாத தீவாக மாற்ற வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 119 கடைகள் இயங்கி வந்த நிலையில், ராமநாதபுரத்தில் 4 மதுக்கடைகள், கீழக்கரை, பரமக்குடி, சாயல்குடி மற்றும் அபிராமம் ஆகிய இடங்களில் தலா 1 என 8 கடைகள் மூடப்பட்டுள்ளன. பாம் பனில் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து மேலாண் இயக்குநர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பாம்பனில் உள்ள கடைகள் மூடப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE