சென்னை: குளம், ஏரி உள்ளிட்டவைகளில் மீன்பிடி குத்தகை தொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த புதிய அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்களில், `ஏரி, குளம், கால்வாய், முகத்துவாரம் உள்ளிட்ட நீர் நிலைகளில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை வழங்கும்போது, மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என தமிழ்நாடு மீன்வளத் துறை 1993-ல் அரசாணை பிறப்பித்தது.
மேலும், அதில் இந்த கூட்டுறவு சங்கங்கள் குத்தகை எடுக்க முன்வராத பட்சத்தில் மட்டுமே, பொது ஏலம் விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையே தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, மீன்பிடி குத்தகை தொடர்பாக தமிழக மீன்வளத் துறை கடந்த ஆண்டு ஜன. 4-ம்தேதி பிறப்பித்த புதிய அரசாணையில், பொது ஏலம் மூலமாக அதிக விலை கோருபவர்களுக்கு மட்டுமே மீன் பிடிப்பதற்கான குத்தகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி மீனவர்களுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் மீன்பிடிக் குத்தகையில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், பொது ஏலம் மூலமாக குத்தகையை நிர்ணயிக்க வேண்டுமென தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை சட்ட விரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சண்முகசுந்தர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு கடந்த ஆண்டு புதிய அரசாணையைப் பிறப்பித்தது.
கடந்த 1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு, இந்த அரசாணை முற்றிலுமாக முரணாக உள்ளதால், 2022-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மீன்பிடி குத்தகைக்கான ஏலம் விடும்போது, மீனவர்கள், பட்டியலினத்தவர்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கத்துக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் தொகைக்கேற்ப குத்தகை எடுக்க இந்த கூட்டுறவு சங்கங்கள் முன்வராத பட்சத்தில், உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒருவேளை அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இருந்தாலோ அல்லது கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகமும் குத்தகை எடுக்க விரும்பினாலோ, பொது ஏலம் மூலம் குத்தகை விடப்பட வேண்டும்.
மேலும், மீன்களை அதிகம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தண்ணீரை மாசுபடுத்தக்கூடாது. அவ்வாறு தண்ணீரை மாசுபடுத்தி, அதை விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்கி நிலத்துக்கு தீங்கு ஏற்பட்டால், மீன்பிடிக் குத்தகையை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago