கோவை ரயிலை போடி வரை நீட்டிக்க திண்டுக்கல் எம்.பி.-க்கு தேனி பயணிகள் கோரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

போடி: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் என்று திண்டுக்கல் எம்.பி.க்கு தேனி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிக்கு கடந்த 15-ம் தேதியில் இருந்து ரயில் சேவை தொடங்கி உள்ளது. தற்போது மதுரையில் இருந்து பயணிகள் தினசரி ரயிலும், சென்னையில் இருந்து வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து போடிக்கு ரயில் இயக்கக் கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கார்டமம் சிட்டி ரயில் பயணிகள் மற்றும் தென்னக ரயில்வே சேவை குழுவினர் ஆகியோர் திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்கு வேலை, கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர். தேனி மாவட்டம் பருத்தி உற்பத்திக்கு பெயர் பெற்றது. அதேபோல் ஜவுளித் தொழிலில் கோயம்புத்தூர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆகவே. இரு மார்க்கமாக இயங்கும் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை (06419/20) போடி வரை நீட்டிக்க வேண்டும்.

இதன் மூலம் வர்த்தக வளர்ச்சி வெகுவாக உயரும். மேலும் தேனி மாவட்ட சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு மற்ற பகுதி மக்கள் எளிதில் வந்தடைய முடியும். அதே போல் ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களும் இணைப்புரயில் மூலம் பயனடைவர். ஆகவே போடி வரை இந்த ரயிலை நீட்டிக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE