தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி - மணிக்கு ஒரு முறை புள்ளி விவரம் சேகரிக்கும் நிர்வாகம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மற்ற அனைத்து கடைகளிலும் மணிக்கு ஒரு முறை விற்பனை விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்தது.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்தும் மணிக்கு ஒரு முறை மதுபான விற்பனை விவரங்களை நிர்வாகம் நேற்று சேகரித்தது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் இதுவரை ஒரு நாள் மதுபான விற்பனையை விலையின் அடிப்படையில் 3 ரகங்களாகப் பிரித்து கடை மூடும் நேரத்தில் அலுவலகத்துக்கு தெரிவிப்பது வழக்கம்.

ஆனால், இன்று முதல்(நேற்று) மணிக்கு ஒருமுறை மதுபான விற்பனை விவரங்களை அந்தந்த கடையின் மேற்பார்வையாளர் மூலம் அலுவலகத்துக்கு செல்போனில் இருந்து தொடர்புகொண்டு தெரிவிக்கப்பட்டது.

இதற்காக டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் ஒரு தாலுகாவுக்கு ஒரு பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இறுதியாக, ஒரு நாள் மொத்த விற்பனை விவரம் தெரிவிக்கப்பட்டது. எதற்காக இந்த விவரங்கள் கேட்கப்பட்டன என்று அலுவலர்கள் கூறவில்லை. எனினும், தமிழகத்தில் 500 கடைகள் மூடப்பட்ட பிறகு விற்பனை எவ்வாறு நடந்தது என்பதை அறியவும், கடை திறப்பின் நேரத்தை மாற்றி அமைக்கவும் இருக்கலாம் என கருதுகிறோம் என்றனர்.

இந்த நடைமுறையானது, தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் பெற்றதைப் போன்று டாஸ்மாக் மதுபான விற்பனை விவரங்கள் பெறப்பட்டதாக பணியாளர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE