பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சென்னையில் தர்ணா போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்தரம், தொகுப்பூதிய உயர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, 1,000-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் சென்னையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழக ஆஷா பணியாளர் சங்க பொதுச்செயலாளர் வஹிதா நிஜாம் தலைமை வகித்தார். ஏஐடியுசி அகில இந்தியப் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டம் குறித்து ஆஷா பணியாளர்கள் கூறியதாவது: மலைப் பிரதேச கிராம மக்களுக்கும், முதன்மை சுகாதார மையங்களுக்கும் இடையே பாலமாக இருந்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை ஆஷா பணியாளர்கள் செயல்படுத்தி வருகிறோம். தாய், சேய் நலனை குறிக்கும் எம்எம்ஆர் மற்றும் ஐஎம்ஆர்-ல் சிறந்த முன்னேற்றம் ஏற்பட முழு காரணம் ஆஷா பணியாளர்கள்தான். அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகிறோம்.

ஆனால், ஆஷா பணியாளர்களை ‘செயல்பாட்டாளர்கள்’ என்று வகைப்படுத்தி, மாதம் ரூ.3,000-க்கும் குறைவான ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களும் ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியம் அறிவித்துள்ளன.

பணி நிரந்தரம், மாதம் ரூ.24,000 ஆயிரம் தொகுப்பூதியம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 2020-ல் சென்னையில் நடைபெற்ற ஆஷா பணியாளர்களின் கோரிக்கை மாநாட்டுக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர், 12-ம் வகுப்பு படித்த, 45 வயதுக்குள் இருக்கும் ஆஷா பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்களாக (விஹெச்என்) பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார். ஆனால், இதுவரை அது அமல்படுத்தப்படவில்லை. முதல்வரிடமும் பல முறை மனுக்களை அளித்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை. இனியாவது எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE