சென்னை: யார் தலைமையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பொது வேட்பாளர், குறைந்த பட்ச செயல்திட்டம் உள்ளிட்ட 7 பிரச்சினைகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைக்க எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு சென்னை திரும்பிய முதல்வர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள நானும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தோம். அங்கு அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் சந்தித்தேன். குறிப்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இல்லத்துக்குச் சென்றேன். அவரிடம் உடல்நலம் விசாரித்தேன். ஒன்றிய அளவில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டியிருந்தார்.
பாஜக என்பதால் தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக மட்டும் இதை யாரும் நினைக்க வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்களை காக்க வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம்.
இதில் கடைசிவரை உறுதியாக இருக்க வேண்டும். 2023 ஜூன் 23-ம் தேதி கூடினார்கள். 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று தெரிவித்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழகத்தில் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணம். அதேபோல் அகில இந்திய அளவில் ஒற்றுமைதான் முக்கியம் என வலியுறுத்தினேன்.
சில முக்கியமான ஆலோசனைகளையும் அக்கூட்டத்தில் நான் வழங்கினேன். குறிப்பாக, எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைக்கலாம். கூட்டணியாக அமைக்க முடியாவிட்டால் தொகுதி பங்கீடு மட்டும் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைப்பது என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.
அரசியல் கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்ற 7 பிரச்சினைகளை சரிசெய்ய, ஒருங்கிணைந்த நடவடிக்கைக்குழு அமைக்க வேண்டும் என்று கூட் டத்தில் கூறியுள்ளேன். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதுதான் கருவாகியிருக்கிறது. அது உருவாக சில மாதங்களாகலாம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்காததற்கு காரணம் உள்ளதா?
நன்றி சொல்லி முடியும்வரை நான் கூட்டத்தில் இருந்தேன். அதன்பின் விமானத்தை பிடிக்க நேரமாகிவிட்டது. மதிய உணவுக்குப்பின்தான் செய்தியாளர்கள் சந்திப்பு வைத்திருந்தனர். மதிய உணவை கூட சாப்பிட முடியாமல் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். விமானத்தில்தான் மதிய உணவை சாப்பிட்டேன். எந்த நோக்கத்துடனும் வெளியில் வரவில்லை.
2-ம் கட்ட கூட்டம் சிம்லாவில் நடக்கிறது. முதல்கட்ட கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லையா?
முதல்கட்ட கூட்டத்தில் கூடினோம். என்ன செய்வது என்று முடிவெடுத்துள்ளோம். அடுத்தடுத்த கூட்டத்தில் தெரிவிப்போம்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவெடுக்கப்பட்டுள்ளதா?
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவெடுக்கவில்லை. நீங்கள் பிரதமர் வேட்பாளர் குறித்து ஆர்வமாக இருப்பது தெரிகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago