வங்கக்கடலில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க விரைவில் டெண்டர்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இப்பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தம் கோருவதற்கான ஆயத்த நடவடிக்கையில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அண்ணா நினைவிட பகுதியில், அவருக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் ரூ.81 கோடியில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

42 மீட்டர் உயரத்துக்கு அமைக்கப்படும் பேனா வடிவ நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்துக்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்துக்கு கடலிலும் என மொத்தம் 650 மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கப்படுகிறது. மொத்தம் 8,551 சதுர மீட்டரில் இந்த நினைவிடம் அமைக்கப்படுகிறது.

மேலும், கடற்கரையில் இருந்து நினைவுச் சின்னத்துக்கு செல்ல, கடற்பரப்பில் இருந்து 6 மீட்டருக்கு மேல் அமைக்கப்படும் 650 மீட்டர் நீள பாலமானது 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும்.

இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் அனுமதி அளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அடிப்படை பணிகளை தமிழக பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அடுத்த வாரம் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, விரைவில் ஒப்பந்தம் கோரப்படும். இதைத் தொடர்ந்து, பணிகளை 3 மாதங்களில் தொடங்கி, வரும் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE