மேட்டூர் அரசு மருத்துவமனையில் இடிந்த நிலையில் காணப்படும் தடுப்பு சுவர் - கண்டுகொள்ளாத மருத்துவமனை நிர்வாகம்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் இடிந்த நிலையில் காணப்படும் தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, பொது மருத்துவம், எலும்பு முறிவு என 20க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பிரிவுகளை ஒட்டி கருங்கற்களான தடுப்பு சுவர் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில், தடுப்புச் சுவரின் ஒரு பகுதியின் பாதி இடிந்து சாலையோரம் உள்ள மின்மாற்றி அருகே விழுந்தது. இதுவரை, இடிந்து விழுந்த சுவரை அகற்றாமலும், சீரமைப்பு பணிகளையும் மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. மேலும், அப்பகுதியில் பல இடங்களில் தடுப்புச் சுவர் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

தற்போது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்யும் போது, தடுப்புச் சுவர் முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் மகப்பேறு புற நோயாளிகள் பிரிவுக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், தடுப்புச்சுவர் இடிந்து மின்மாற்றியின் மீது விழவும் வாய்ப்புள்ளது. இதனால் மருத்துவமனைக்கு மின் தடையும், தீ விபத்து உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தடுப்புச் சுவரை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE