பாளை. சிறையில் இளைஞர் மரணம்: நீதி விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: "தென்காசியைச் சேர்ந்த இளைஞர் தங்கசாமியின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த தங்கசாமி என்ற 26 வயது இளைஞர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்காசியில் சுமார் 69 டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும் அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 13 டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் பார் லைசென்ஸ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள டாஸ்மாக் கடைகளில் சட்ட விரோத பார்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக, புளியங்குடியில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், அந்த மூன்று கடைகளிலும் சட்ட விரோத பார்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகளின் மூலம் தெரிய வருகிறது.

இந்நிலையில், தங்கசாமி அவரது பாட்டியுடன் மதுபானங்களை விற்றார் என்று புளியங்குடி காவல் துறையினரால் கடந்த 11.6.2023 அன்று கைது செய்யப்படுகிறார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த இளைஞர் தங்கசாமி கைது செய்யப்பட்டு காவல் விசாரணையில் 3 நாட்கள் இருந்த பின்பு 14-ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 16.6.2023 அன்று உடல்நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துவிட்டார் என்ற காவல் துறையின் அறிவிப்பு அப்பகுதி மக்கள் அனைவரிடமும், குறிப்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அகால மரணமடைந்த அந்த இளைஞரின் உடல் முழுவதும் ரத்தக் கட்டுகள், காயங்கள் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காயங்கள் புளியங்குடி காவல் துறையினர் தங்கசாமியை அடித்துத் துன்புறுத்தியபோது ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவர் இறந்துவிட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

தவறு இழைத்த காவல் துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும்; மகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கக் கோரியும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும், கடந்த ஏழெட்டு நாட்களாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தங்கசாமி உண்மையிலேயே தவறு செய்திருந்தால் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதுதான் காவல் துறையினரின் பணியாகும். அதை விடுத்து காவலர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது தவறு.

ஏற்கெனவே, அருகில் உள்ள அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களும், புகார் கொடுக்க வந்தவர்களும் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டும், அவர்களில் ஒருசிலரது பல் பிடுங்கப்பட்டும் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது. சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியவுடன், கண்டிப்பாக தவறு இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று இந்த திமுக அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை, குற்றம் இழைத்த காவல் துறையினருக்கு சட்ட ரீதியான எந்தத் தண்டனையும் நீதிமன்றத்தின் மூலம் வாங்கித் தரப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் காவல் துறை, ஜெயில் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தங்கசாமி இறந்தது, தமிழகத்தில் லாக்கப் இறப்பு பட்டியலில் ஒரு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியில் கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், அரசு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானத்தை அருந்துபவர்கள் மரணம் என்று மதுபான மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

`தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், பிரதமர் கனவோடு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது, காவல் துறையினர் அத்துமீறி நடந்துகொள்வது ஏற்க முடியாது. தங்கசாமியின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்