மஞ்சப்பை வலைதளம், செயலியில் பல வசதிகள்: மாசுக் கட்டுப்பாடு வாரியம் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மஞ்சப்பை செயலியில் உள்ள வசதிகள் தொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் (TNPCB) இணைந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையினை கடந்த 2019-இல் இருந்து செயல்படுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரிகளை கொண்டு மாவட்ட வாரியாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான தொடர் சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக 06.06.2023 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அரங்கத்தில் நடைபெற்ற உலக சுகாதார தினவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த “மீண்டும் மஞ்சப்பை இணையதளம்” மற்றும் “மீண்டும் மஞ்சப்பை செயலியானது அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில உருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மஞ்சப்பை இணையதளம், பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார விவரங்களை அறிந்த கொள்ள உதவுகிறது. தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட மாவட்ட வாரியான அமலாக்க விவரங்கள், பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் அமைந்துள்ள இடங்கள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் சமீபத்திய சர்வதேச, தேசிய மற்றும் மாநில செய்திகள் மற்றும் வெளியீடுகளை வழங்கும். இதேபோல், மஞ்சப்பை செயலி, தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஞ்சப்பை செயலி மூலம், கூகுள் வரைபடத்தின் மூலம் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் விவரங்களை அறிந்துகொள்ள மற்றும் பதிவு செய்ய செய்யலாம். தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர்க்கு எதிராக புகார்களை பதிவு செய்யலாம். மேலும் தெரிந்துகொள்ள www.tnpcbmeendummanjappai.com மற்றும் "மீண்டும் மஞ்சப்பை" செயலியிணை Play Store-லிருந்து பதிவிறக்கவும் செய்து பயன்படுத்தவும்" என்று அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE