குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்கும் விதிகளை வகுக்க காவல்துறைக்கு கால அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பது முக்கியமானது என்பதால் அவசரம் காட்ட வேண்டாம் எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், விதிகளை வகுக்க காவல்துறைக்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த, தீவிர குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை ஏன் நியமிக்கக்கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் 11 தாலுகாக்களில் சிறப்பு புலன் விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர குற்ற வழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மற்ற தாலுகாக்களிலும், இந்த பிரிவுகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் விதிகள் வகுக்கும் நடைமுறைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. எனவே, அதற்கு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும், புலன் விசாரணையை முடித்து, உரிய காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, சமீபத்தில் நடந்த அரசு வழக்கறிஞர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞர்களின் கருத்தை பெற வேண்டியதில்லை என டிஜிபி கடந்த 2022 ஏப்ரல் 8ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தீவிர குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு பிரிவை துவங்குவதற்கான காவல் நிலையங்களை அடையாளம் காண வேண்டும். டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பது முக்கியமானது என்பதால் அவசரம் காட்ட வேண்டாம் எனக்கூறி, நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக அவற்றை உரிய காலத்துக்கு முன், அரசு வழக்கறிஞர்களுக்கு அனுப்பும் வகையில் விளக்க சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ஆய்வுக்கு அனுப்பப்படும் இறுதி அறிக்கைகளை விரைந்து ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்வு இயக்குனர், அனைத்து அரசு வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தீவிர குற்ற வழக்குகளில் திறமையான முறையில் புலன் விசாரணை செய்து, குறித்த காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தொடர்பாக டிஜிபிக்கும், தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்களுக்கும், பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலாளருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்தும் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் ஆய்வுக் கூட்டத்தை தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்