கரூரில் மீண்டும் வருமான வரித் துறையினர் சோதனை

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் உணவக பங்குதாரர்கள் வீடுகளில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் வருமான வரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது 5 இடங்கள் சீல் வைக்கப்பட்டன.

வருமான வரித் துறை சோதனையைத் தொடர்ந்து ஜூன் 13-ம் தேதி கரூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கட்டிட த்திற்கு சீல் வைத்தனர்.

கடந்த முறை வருமான வரித்துறை சோதனையில் கரூர் - கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் மற்றும் பங்குதாரர்கள் கார்த்திக், அதிபர் ரமேஷ் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கார்த்திக், ரமேஷ் வீடுகளில் தலா ஒரு அறைக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், கரூர் ஈரோடு சாலையில் கோதை நகரில் அபார்ட்மெண்டில் உள்ள கார்த்திக், அதிபர் ரமேஷ் வீடுகளுக்கு இன்று (ஜூன் 23ம் தேதி) காலை 10 மணிக்கு 5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புடன் வந்தனர். இருவர் வீடுகளிலும் சீல் வைக்கப்பட்ட அறைகளின் சீல்களை அகற்றி மீண்டும் சோதனை தொடங்கியுள்ளனர்.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகளை தொடர்ந்து மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE