கோவை, திருப்பூர், நீலகிரியில் மூடப்பட்ட 47 டாஸ்மாக் மதுக் கடைகளின் விவரம்

By செய்திப்பிரிவு

கோவை / திருப்பூர் / உதகை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 47 டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.

கோவை மாவட்டத்தில் 290 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 20 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. அதன்படி, காந்திபுரம் 5-வது வீதி, 2-வது வீதி, விளாங்குறிச்சியில் 2, ராம்நகரில் 2, டாடாபாத் 11-வது வீதி) இடிகரை சாலை, விஸ்வநாதபுரம் ருக்கம்மாள் காலனி, துடியலூர் பிரதான சாலை, பட்டணம் இட்டேரி தோட்டம், சிங்காநல்லூர் கமலக்குட்டை சாலை,

இருகூர் சாலை, ஜெகநாதன் நகர், பேரூர் பிரதான சாலை தெலுங்குபாளையம், புலியகுளம், மதுக்கரை சாலை, செம்மாண்டம்பாளையம் சாலை, பாலத்துறை, பொள்ளாச்சி தாலுகாவில் ஒன்று என மொத்தம் 20 கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது,‘‘மூடப்பட்ட கடைகளில் விற்பனைக்காக இருந்த மதுபாட்டில்கள், குடோன்களுக்கு கொண்டு வரப்பட்டன. இங்கு பணியாற்றிய சூப்பர் வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் உள்ளிட்டோர் ஆட்கள் தேவைப்படும் கடைகளுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்’’ என்றனர். இதே போல் திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் 133 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன.2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முதல் கட்டமாக தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்பேரில், நீலகிரி மாவட்டத்தில் 31 கடைகள் மூடப்பட்டன. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலையிலிருந்த 20 கடைகளும், மாவட்டம் முழுவதும் 3 கடைகளும் மூடப்பட்டன.

மக்கள் எதிர்ப்பு மற்றும் வருமானம் குறைவு காரணமாக மேலும் 3 கடைகள் மூடப்பட்டன. இதனால், தற்போது 76 கடைகள் இயங்கி வந்தது. இந்நிலையில், தற்போது அரசு மேலும் சில மதுக்கடைகளை மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, கூடலூரில் காளம்புழா, உதகை ஏடிசி பேருந்து நிறுத்தத்திலிருந்து சேரிங்கிராஸ் செல்லும் வழியில் உள்ள மதுப்பான கடை மற்றும் லோயர் பஜார் பகுதி என 3 கடைகள்நேற்று மூடப்பட்டன.

கடைகள் மூடப்படுவதற்கான அறிவிப்பு, கடைகள் முன்பு ஒட்டப்பட்டது. இதனால், மது வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேசமயம், மூடப்பட்ட கடைகளில் உள்ள மது வகைகள் இருப்பு எடுத்துச் செல்லப்படும் வரை போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE