விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அஞ்சல் துறையின் காப்பீடு திட்டத்தில் ரூ.10 லட்சம்

By செய்திப்பிரிவு

சென்னை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.399 மற்றும் ரூ.396 பிரீமியம் தொகை செலுத்தி கணக்கை தொடங்கி, காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்தால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

அந்த வகையில், விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்த ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரி முத்து ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவர்களின் நியமனதாரர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட முதன்மைஅஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி கலந்து கொண்டு, நியமனதாரர்களுக்கு காசோலையை வழங்கினார்.

அப்போது சாருகேசி பேசுகையில், ``இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் செய்திருக்கும் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த மறுநாளே உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் நியமனதாரர்களால் காப்பீடு தொகை ரூ.10 லட்சம் பெற முடியும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE