60,000 காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு, ஊர்மாற்றல் உத்தரவு, விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும், வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணியாணை வழங்க வேண்டும், கேங்மேன்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும்,

ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலை 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய ஊதிய உயர்வை 10 ஆண்டுகள் என மாற்றியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாநிலம் முழுவதும் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு) ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையைப் பொருத்தவரை கே.கே.நகர், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் எஸ்.கண்ணன், வி.சீனிவாசன், எஸ்.விஜயபாஸ்கர், ரவிக் குமார், முருகானந்தம், தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE