சென்னை பல்கலைக்கழகத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதி மற்றும் மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாதச் சம்பளத்தைக்கூட தர இயலாத சூழ்நிலை நிலவுவதாகவும், பல்கலைக்கழகத்தின் மொத்த மாதச் செலவுக்கு ரூ.18.61 கோடி தேவைப்படுவதாகவும், கடந்த மே மாத நிலவரப்படி சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.5 கோடி மட்டுமே இருந்ததாகவும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் ரூ.11.50 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி, அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.7.60 கோடி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்ககம் அரசுக்குப் பரிந்துரைத்த, 2021-2022-ம் ஆண்டுக்கான ரூ.11.46 கோடியை இன்னும் விடுவிக்கவில்லை என தெரிகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து எவ்வித விவரமும் தங்களிடம் இல்லை என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சென்னைப் பல்கலைக்கழக விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாகத் தலையிட்டு, உரிய நிதி, மானியத்தை பல்கலைக்கழகத்துக்கு வழங்கவும், பிற பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியையும் உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வலி யுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE