நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர்கள் பெ.சண்முகம், எஸ். குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் கடந்த ஏப்.21-ம் தேதி, மக்களுக்கு விரோதமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தவும், விவசாயிகளின் நிலங்களை எந்தவித கட்டுப்பாடின்றி அபகரிக்கவும் 2 சட்டங்கள் இயற்றப்பட்டன. இதில் மக்கள் கொடுத்த அழுத்தத்தால், தொழிலாளர்கள் சட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆனால், விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டம் இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இச்சட்டத்தின் மூலம் 250 ஏக்கருக்கு மேல் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு நிலங்கள் கேட்டாலும், அரசு கட்டுப்பாடின்றி வழங்க முடியும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் நிறுவனங்களுக்கு நிலங்களை வாரி வழங்கத்தான் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்தவகையில் தற்போது சென்னையில் அதானிக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்துக்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இப்படித்தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி முன்னேறும் என்றால், அது தேவையில்லை.

நாங்கள் இந்த அரசை எதிர்க்கவில்லை. முதல்வர் விவசாயிகளுக்கு எதிரியும் அல்ல. ஆனால், தவறு செய்தால், அதை சுட்டிக்காட்டுகிறோம். நானும் டெல்டாக்காரன்தான் என்கிறார் முதல்வர். அப்படியெனில் இந்த சட்டத்தை அவர் திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்கள் சாமி.நடராஜன், பி.எஸ் மாசிலாமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் உலகநாதன், டெல்லிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE