வங்கக்கடலில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி: 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்த நினைவிடத்துக்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்டு, அந்த அறிக்கையும் அனுப்பப்பட்டது.

இதை ஆய்வு செய்த கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம், பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறைக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில். ‘தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தின் பரிந்துரை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பிய திட்ட அறிக்கை, வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை ஏற்று, வங்கக்கடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை தமிழக அரசின் பொதுப்பணித் துறை அமைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமைகள் வளை அமைந்துள்ள பகுதிகளில் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது.
கட்டுமானப் பணிகளுக்கு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதியில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என்பது உட்பட 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

தேவைப்படும்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை உண்டு. கட்டுப்பாடுகள் மீறப்பட்டாலோ, திருப்திகரமாக இல்லாவிட்டாலோ இந்த அனுமதியை திரும்ப பெறவோ, நிறுத்தி வைக்கவோ அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த அனுமதியை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 30 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்வதற்கும் அனுமதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE