கிருஷ்ணகிரி அருகே சுவாசக் கோளாறால் பாதித்த பெண்ணுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, உதவித் தொகை வழங்கல்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு தேடிச் சென்று, ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, மாதந்திர உதவித்தொகை பெற ஆணை மற்றும் இருசக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை கிருஷ்ணகிரி ஆட்சியர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதூர் அடுத்த அம்னேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சென்றாயன். இவரது மனைவி சித்ரா. இவர், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். சித்ரா தனது தாய் மூலம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மூச்சுவிட முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறேன். கூலிவேலை செய்யும் எனது கணவரால், 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்கும் அளவிற்கு வசதியில்லை. எனவே எனக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, உதவித்தொகை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்மனுவின் மீது உடனடியாக நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று அம்னேரி கிராமத்தில் உள்ள சித்ரா வீட்டிற்கு நேரடியாகச் சென்று, ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 பெறுவதற்கான ஆணை மற்றும் இரண்டு சக்கர நாற்காலி உள்ளிட்டவை வழங்கினார்.

அப்போது ஆட்சியர் கூறியதாவது: ''சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட சித்ராவிற்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் மூலம் செவிலியர்கள் தொடர் சிகிச்சை அளிக்கவும், மாதந்தோறும் ரூ.1500 மதிப்பிலான மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தொடர்ந்து இயங்க ஏதுவாக மின்சாரம் தடையில்லாமல் வழங்க மின்வாரிய அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேல் சிகிச்சை தேவைப்படும்போது 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய வீட்டிற்கு செல்லும் வழி மிகவும் குறுகலாக உள்ளதால் அந்த மண் சாலையை நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை அமைத்து கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார், வட்டாட்சியர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் விஜயகுமார், மருத்துவர்கள் திலக், விமல், சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரமாலட்சுமி, விஏஓ வெகங்டேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE