சென்னை, புறநகரில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி; மழை நீடிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. முக்கிய சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் இந்த திடீர் மழையால் சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீர் கனமழை:மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திடீரென பெய்த கனமழையால் சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

காலை முதலே சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரமாக பெய்த மழையின் காரணமாக, முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இந்த திடீர் மழையால் குளுமையான சூழல் நிலவியது. மழை காரணமாக சாலைகளில் போதிய வெளிச்சமின்மையால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றன.

கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, தியாகராயநகர், வள்ளுவர்கோட்டம், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர், உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்த திடீர் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வானிலை முன்னறிவிப்பு: தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 23-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவை ஒட்டியிருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை - வங்கக்கடல் பகுதிகள்: இன்றும் நாளையும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுகதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24ம் தேதி முதல் 26ம் தேதிவரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுகதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்: லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE