மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுல்வாலா தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு உயர் நீதிமன்றம் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கங்காபுர்வாலா பேசியதாவது: ''இங்கு பேசியவர்கள் மதுரை கோயில் நகரம் என்றனர். சிலப்பதிகாரம் எனும் பெரும் காப்பியம் உருவாக காரணமாக இருந்த நகரம் மதுரை. பெருமை மிக்க மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி. வழக்கறிஞர்கள் தங்களின் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். சக நீதிபதிகள், வழக்கறிஞர்களின் உறுதுணையாக செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

நீதித்துறை வளர்ச்சியில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது. நீதிமன்றத்தில் காகித பயன்பாட்டை நிறுத்தி டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். அந்தத் திட்டம் உயர் நீதிமன்றத்தில் அமல்படுத்தப்படுகிறது. மாவட்டம், தாலுகா அளவிலான நீதிமன்றங்களிலும் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், நீதிபதிகள் சுரேஷ்குமார், வேல்முருகன், சுவாமிநாதன் உள்ளிட்ட மதுரை கிளை நீதிபதிகள், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், அரசு பிளீடர் திலக் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE