ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் அண்மைக் காலமாக, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தை சாலையிலேயே கழிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இதைப் போக்குவதற்கு சாலை விதிகளை சீரமைத்து, ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும்.

ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும் போது சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, போக்குவரத்தை சீர்செய்திட வேண்டும். கூடுதலாக ஆம்புலன்சிலிருந்து போக்குவரத்துக் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளும் வகையில், ஆம்புலன்சில் வயர்லஸ் கருவி பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE