எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று பிஹார் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

வரும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி தொடர்பான கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்தார். மேலும், தனது பிறந்த நாள் விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்களை அழைத்து, ஒருங்கிணைப்பு முயற்சிக்கு அடித்தளமிட்டார்.

இதற்கிடையே, பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதரவை கோரினார்.

இதையடுத்து, ஜூன் 12-ம் தேதி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி மாற்றப்பட்டது. அதன்படி, இந்த கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இக்கூட்டத்தில் தான் பங்கேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் பிஹார் தலைநகர் பாட்னா செல்ல உள்ளதாகவும், அங்கு நாளை நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நாளை இரவு அங்கிருந்து சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE