செந்தில் பாலாஜியை பதவி நீக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு 21-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசைக் கண்டித்தும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி எந்த ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்கவில்லை. மதுரை ஆரம்பாளையத்தில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமையிலும், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையிலும், கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், நாமக்கல் ராசிபுரத்தில் பி.தங்கமணி தலைமையிலும், சேலத்தில் செம்மலை தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் பேசியதாவது: ஆளுநர் இன்னும் சில நாட்களில் டெல்லி செல்வதாக தகவல் உள்ளது. திமுக அரசு டிஸ்மிஸ் என்ற நல்ல செய்தி விரைவில் வரும். அன்றுதான் தமிழகத்துக்கு தீபாவளி. இந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகம் ஒரு பயனையும் பெறவில்லை.

திமுக அமைச்சர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது. எவ்வளவு கொள்ளையடிக்கலாம், எதில்ஊழல் செய்யலாம் என்ற சிந்தனைதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது. ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தது தொடர்பாக மத்திய அரசு தோண்ட ஆரம்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் 90 சதவீத அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறார். அடுத்து பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் போன்றோர் சிறைக்குச் செல்ல உள்ளனர். ஊழலுக்காகவே வீட்டுக்குப் போகும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னை யன், க.பாண்டியராஜன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE