தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? - ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக தலைமைச் செயலராக பணியாற்றி வருகிறார் இறையன்பு. கடந்த 1988-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் 3 பேரின் பெயர்கள் பரவலாகப் பேசப்படுகிறது.

இதில் முதலில் இருப்பவர் தற்போதைய தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்) தலைவராக உள்ளார். அடுத்தது, 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ்வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார். மூன்றாவதாக உள்ளவர் 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராக உள்ளார்.

இவர்களில் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.

இவர்களில் பெரும்பாலும், சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அடுத்த தலைமைச் செயலர்யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE