மதுரையில் ரூ.150 கோடியில் புதிய சாலை பணிகள் - பருவமழைக்கு முன்பு முடிக்கப்படுமா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை நகரில் ரூ.150 கோடிக்கு புதிய சாலைகள் போடுவதற்கு ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டுள்ள நிலையில் இப்பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாநகராட்சி விரிவாக் கத்தில் உள்ள 28 வார்டுகளில் பாதாள சாக்கடைப் பணியும், 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணியும் நடக்கின்றன. அதனால், குடியிருப்பு சாலைகள் முதல் முக்கியச் சாலைகள் வரை அனைத்தும் இயந்திரம் மூலம் தோண்டி முறையாக மூடப்படாமல் உள்ளன.

மழைக் காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதி யுமாகவும், வெயில் காலத்தில் குண்டும் குழியுமாகி புழுதி பறந்தும் மக்கள் சாலைகளில் பயணிக்கவே முடியவில்லை. வீட்டை விட்டு வாகனங்களிலும், நடந்து செல்ல முடியாமலும் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கார், இரு சக்கர வாகனங்களை வீட்டுக்கு எடுத்து வர முடியாமல் சாலையின் முனையில் நிறுத்தியுள்ளனர்.

ஒருபுறம் வாகனங்கள் தேய்மானமும், விபத்துகளும் நடக்கின்றன. தற்போது பணிகள் முடிந்த வார்டுகளில் புதிய சாலைகள் போடப்படுகின்றன. ஆனால், மாநகராட்சி விரிவாக்கத்தின் 28 வார்டுகளில் ஒரே நேரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியும், புதிய பாதாள சாக்கடைப் பணியும் நடப்பதால் சாலைகள் அடிக்கடி தோண்டப்பட்டு பள்ளமாகிவிட்டன.

ஒரு பணி முடிந்து மற்றொரு பணி தொடங்குவதால் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப் புள்ளி விட்டும் புதிய சாலைகள் போடும் பணியை தொடங்க முடியவில்லை. கடந்த ஆண்டு இதுபோல், வார்டுகளில் புதிய சாலைப் பணி தொடங்குவதற்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. புதிய சாலைகள் போடப்படாமல் விரிவாக்க வார்டுகளில் மக்கள் பரிதவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க முன்கூட்டியே திட்டமிட்டு புதிய சாலைப் பணிகளை தொடங்கி வட கிழக்குப் பருவமழைக்கு முன்பு முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி 100 வார்டுகளில் மொத்தம் ரூ.400 கோடிக்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. மாநகராட்சி வரலாற்றில் ரூ.400 கோடி அளவுக்கு ஒரே நேரத்தில் புதிய சாலை பணிகள் நடப்பது தற்போதுதான் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக அடுத்த 2 மாதங் களில் மட்டும் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடங்கி நடக்கும் நிலையில் அடுத்த சில மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிடும். அதற்குள் இந்த சாலைப் பணிகளை முடிக்கவும், பணிகள் தொடங்காத சாலைகளில் சிறு மதிப்பீட்டில் `ரெடிமிக்ஸ்' சாலையும், ஓரடுக்கு சாலையும் (சிங்கிள் லேயர்) அமைக்க மாநகராட்சி தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘பருவமழைக்கு முன்பு மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைத்து முடிப்பதற்கு வசதியாக 60 தொகுப்புகளாகப் பிரித்து ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பும் 750 மீ.முதல் 1 கி.மீ. வரை புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது. அதனால், அனைத்துச் சாலைகளையும் ஜூலை மாதத்துக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE