தமிழகத்தில் ரூ.10 லட்சம் - ரூ.10 கோடி ஆண்டு வருவாய் வரும் கோயில்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்வு: சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.10 கோடி வரை ஆண்டு வருமானம் வரும் திருக்கோயில்களின் எண்ணிக்கை 316-லிருந்து 578 திருக்கோயில்களாக உயர்ந்துள்ளன" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 21) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் பெருந்திட்ட பணிகள் (Master Plan) குறித்து வனத்துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: "இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 15 பிரசித்திப் பெற்ற திருக்கோயில்களில் பெருந்திட்ட பணிகளின் (Master Plan) கீழ் ரூ.1360.80 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டு காலத்துக்குள் இப்பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்று மலைப் பாதை அமைப்பதற்கு வனத்துறைக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம், 20 தனிநபர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.10 ஏக்கர் நிலம் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு, அதற்குண்டான அனுமதிகளை பெறுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இத்திருக்கோயில் ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தபின் இதுவரை 758 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் குடமுழுக்கு முதல் முறையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.4,719 கோடி மதிப்பீட்டிலான 4,961 ஏக்கர் நிலங்களும், 1,265 கிரவுண்டு மனைகளும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

2022-23 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற அறிவிப்பின்படி 500 இலவச திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. 2023 -24 ஆம் ஆண்டின் அறிவிப்பில் 600 இலவச திருமணங்கள் நடத்திட அறிவிக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக வருகின்ற 07.07.2023 அன்று சென்னையில் முதல்வர் தலைமையில் 30 திருமணங்களும், பிற மண்டலங்களில் 200 திருமணங்களும் நடத்தப்படவுள்ளன.

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும், பெருந்திட்டப் பணிகள் குறித்தும் மாதந்தோறும் தலைமையிடத்திலும், வாரந்தோறும் மண்டல அளவிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை முதல்வரின் வழிகாட்டுதலோடு நடைபெறுகின்ற திருப்பணிகள் போன்று எந்த காலத்திலும் நடைபெறவில்லை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதோடு இந்த ஆட்சி தான் இறையன்பர்களின் பொற்காலமாக திகழ்கிறது.

திருக்கோயில்கள் அதன் வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.10 கோடி வரை ஆண்டு வருமானம் வரும் திருக்கோயில்கள் சட்டப்பிரிவு 46 (iii) ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரிவின் கீழ் இதுவரை 316 திருக்கோயில்கள் இருந்தன. திருக்கோயில்களின் வருமானம் உயர்ந்ததனால் தற்போது அவை 578 திருக்கோயில்களாக உயர்ந்துள்ளன. அதற்கான உத்தரவுகள் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்துக்கு சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழைநீர் சென்று சேரும் வகையில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகளில் 70 சதவீத பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE