கரூர் ஆட்சியர் முன்னெடுப்பில் வீரணம்பட்டி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டத்தின் கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னெடுப்பில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள வீரணம்பட்டி. இங்குள்ள காளி கோயிலில் கடந்த 6-ம் தேதி கோயில் திருவிழா தொடங்கியது. கடந்த 7-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கோயிலில் உள்ளே வழிபாடு செய்ய சென்றபோது அவர்கள் அவரை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் எழுந்ததையடுத்து ஒரு தரப்பினர் கோயிலை பூட்டினர். இதையடுதது பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் மறுநாள் கோயிலை திறந்ததால் அப்போதைய குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி கோயிலுக்கு சீல் வைத்தார். இதையடுத்து, அவரை முற்றுகையிட்டு அவரது காரை சேதப்படுத்தி போராட்டம் நடத்தினர்.

கோயில் சீலை அகற்றக் கோரி 9-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 12-ம் தேதி தரகம்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடத்தி ஊர்வலமாக சென்று கோயில் சீலை அகற்றக் கோரி மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக கோயிலின் சீலை ஆட்சியர் த.பிரபுசங்கர் அகற்றி பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் பட்டியலின மக்கள் சார்பில் அம்மனுக்கு அர்ச்சனை நடைபெற்றது.

கோயில் சீலை அகற்றி திறக்கவும், பட்டியலின மக்களை அனுமதிக்கவும் ஒப்புக்கொண்ட மற்றொரு தரப்பினர், கோயிலினுள் செல்லாமல் கோயிலுக்கு வெளியிலேயே நின்றுக் கொண்டனர். ஊராட்சி மன்றத் தலைவரும் கோயிலினுள் செல்லாமல் நின்றார். பின்னர், வற்புறுத்தல் காரணமாக அவர் கோயிலினுள் சென்றார்.

மாவட்ட நிர்வாகம் சார்பாக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி, அப்பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையிலும், ஒரு தரப்பினர் கோயிலுக்குள் செல்லாதது சற்றே நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE