சீல் வைக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை திறக்கும் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் கரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், குறிப்பிட்ட சமூகத்தினரை அனுமதிக்கவில்லை எனக்கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, ஜூன் 7-ம் தேதி சீல் வைக்கப்பட்டது.

கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை. தீண்டாமையும் பின்பற்றப்படவில்லை. கரோனா ஊரடங்கு காலத்தில்கூட பொதுமக்கள் இல்லாமல் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது கோயிலில் தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்படாமல் உள்ளது. ஆகம விதிகளை மீறும் வகையில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு சீல் வைப்பதை தவிர்த்து, பொதுமக்கள் இல்லாமல் பூஜைகள் நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, கோயிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "கோயில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் ஒருவர் தாக்கப்பட்டார். அறநிலையத் துறை கோயிலுக்கு தக்காரை நியமித்த போதும், அவரால் பொறுப்பேற்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். பிரச்சினை தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், கோயில் விவகாரத்தில் அறநிலையத் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இதுதொடர்பாக அறநிலையத் துறையை அணுக மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE