சென்னை: சென்னையில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தேவைக்கு தகுந்தவாறு தொழில் நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து வழித் தடங்களிலும் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. போக்குவரத்து போலீஸாரின் ஒட்டுமொத்த நடவடிக்கையால் சென்னையில் விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகள் கணிசமாக குறைந்திருந்தாலும், போக்குவரத்து போலீஸாரின் சில அறிவிப்புகள் வாகன ஓட்டிகளை பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், ஒன்றுதான் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈசிஆர் சாலை) அமல்படுத்தப்பட்டுள்ள தனி வழிப்பாதை அறிவிப்பு.
பொதுமக்கள் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதற்காக கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு சந்திப்பு வரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரு வழிப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றி தனிவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இருபுறம் செல்ல வேண்டிய வாகனங்கள் ஒரே சாலையில் எதிர், எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜன.6 அன்று சோதனை ஓட்டம் என தொடங்கப்பட்டு அதே ஆண்டு ஜன.29 அன்று தற்காலிக தனி வழித்தடம் என கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோருக்காக வழித்தடம் அமைத்து கொடுக்கப்பட்டது.
» தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 16 உறுப்பினர் நியமனம் - ஆளுநர் உத்தரவை அடுத்து அரசிதழில் வெளியீடு
மற்ற வாகனங்களின் இடையூறு இல்லாமல் பயமின்றி சைக்கிள் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு இந்த தனி வழித்தடம் பயன்படும் என அப்போது போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் ஆண், பெண்,இளைஞர்கள், முதியோர் என பல தரப்பிலிருந்தும் 80-க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக பயிற்சி மேற்கொண்டனர்.
ஆனால், தற்போது, விரல்விட்டு எண்ணும் வகையில் சுமார் 10 பேர் மட்டுமே பயிற்சி மேற்கொள்கின்றனர். சில நேரங்களில் அவர்களும் வருவதில்லை. இருப்பினும், இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5 முதல் 7 மணி வரை அக்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் 87 பக்கவாட்டு சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு பொது மக்கள் குறுக்கிடாதவாறு கண்காணிப்பு பணியில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோருக்கான பாதுகாப்பு பணியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை முதலே ஈடுபட்டுள்ளனர்.
எந்த விதமான வரவேற்பும் இல்லாத, தனி வழிப்பாதையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் என அனைத்துதரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு வரை 20 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் செல்வதற்காக உருவாக்கப்பட்டு ஒராண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து வரும் தற்காலிக தனி வழித்தடம் திட்டத்தை ரத்து செய்து வழக்கம் போல் வாகனம் செல்ல போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறும்போது, ‘வார இறுதி நாட்களில் வெளியூர்களில் இருந்து தாம்பரம் வந்து அங்கிருந்து பேருந்துகளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பகுதிக்கு அதிளவில் செல்வார்கள். இதனால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் இருக்கும். அந்த நேரத்தில் ஒரு வழிப்பாதை என்ற பெயரில் பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் எதிர் எதிர் திசையில் ஒரே நேரத்தில் வருவதால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அக்கரை பகுதி சாலை மிகவும் குறுகலானது. அதில் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. எனவே, வழக்கம்போல், இந்த சாலையில் இருவழிப்பாதை திட்டத்தை தொடர வேண்டும்’ என்றார்.
ஈஞ்சம் பாக்கத்தைச் சேர்ந்த நவீன் (53) கூறும்போது, ‘இசிஆர் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகள் பேருந்தில் ஏற முடியவில்லை. சாலை நடுவே வந்து காத்திருக்க வேண்டியுள்ளதால் நிழற்குடையின்றி மழை, வெயிலில் குழந்தைகள், பெண்கள், வயதான பயணிகள் கால்கடுக்க காத்திருந்து பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், பாதசாரிகளும் வழக்கம்போல் சாலையை கடக்க முடியவில்லை. வார இறுதிநாட்களில் கடற்கரை பகுதிக்கு வாகனங்களில் சுற்றுலா வருவோரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், சைக்கிளில் பயிற்சி மேற்கொள்வோருக்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் வேறு யாரும் நுழைந்து விட முடியாது. இந்த விஷயத்தில் போலீஸார் மிகவும் கெடுபிடி காட்டுகின்றனர். எனவே, அனைவரும் பயனடையும் வகையில் ஒருவழிப்பாதை திட்டத்தை கைவிட வேண்டும்’ என்றார்.
ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன் கூறும்போது, ‘எப்போதும் நெரிசல், பரபரப்பு என காணப்படும் சாலை வார இறுதி நாட்களில்தான் ஓரளவு நெரிசலின்றி காணப்படும். அந்த நேரத்திலும் ஒரு வழித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயற்கை நெரிசலை போக்குவரத்து போலீஸார் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, வரவேற்பு இல்லாத சைக்கிள் தனி வழிப்பாதையை நீக்கி விட்டு வழக்கம்போல் வாகனங்கள் இரு வழியிலும் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு சந்திப்பு வரை 20 கி.மீ. தூரத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரு வழிப்பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago