சென்னையில் எஞ்சிய 354 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மீதமுள்ள 354 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் இன்று (21.06.2023) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்பொழுது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடித்திட வேண்டும் என்றும் மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றிட வேண்டும் என்றும் மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடித்திட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், மழையினை எதிர்நோக்கி அனைத்து மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் தயார்நிலையில் இருந்திட வேண்டும் என்றும் மழையின் காரணமாக எப்பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இதற்கான பணிகளை மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

இதுவரை 1154 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 800 கி.மீ, மழைநீர் வடிகால் பணிகள் ரூ.1,540 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 354 கி.மீ,. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் உடனடியாக முடித்திட வேண்டும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள 85.69 கி.மீ. நீளத்திலான ரூ.245.37 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாகவே முடித்திட வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மக்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வாரியப் பணிகள் போன்ற சாலை வெட்டுக்களை உடனுக்குடன் சீர்செய்ய வார்டு வாரியாகவும், மண்டல வாரியாகவும், தலைமையிடத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றிட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE