அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசவுள்ளோம்: அமமுக செயற்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயபேட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் தலைமை வகித்தார். இதில், அமமுக பொருளாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.செல்வம் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல், விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: மக்களவை தேர்தலுக்கு காலம் இருப்பதால் கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

செந்தில் பாலாஜி விவகாரத்தைபொறுத்தவரை சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. அதேநேரம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதை அறிந்துவருத்தமாக உள்ளது. இவற்றை அவர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இதில் பலிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை.

பிரதமர் மோடியை எதிர்க்கும் வலுவான தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கூறுகின்றனர். அவர் முதலில்அமலாக்கத்துறையை எதிர்த்து விட்டு வரட்டும். முதல்வர் பேசும்வசனங்கள் அனைத்தும் பயத்தின்வெளிப்பாடுதான்.

ஏற்கெனவே சொன்னதுபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக இணைந்துதான் செயல்பட போகிறோம். மீண்டும் அவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE