10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வழக்கு: விரைவில் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு

By செய்திப்பிரிவு

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.

கடந்த 2019 ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் அர்ச்சகரான பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இந்த பொதுநல வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கோரி பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் தரப்பில் அவரது வழக்கறிஞர் கே. சுப்புரங்க பாரதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்குகளை வரும் ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE