ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணை இன்று திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால், ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறவுள்ள நிலையில், நீர் இருப்புக்கு ஏற்றவாறு எத்தகைய பயிரை நடவு செய்யலாம் என வேளாண்மைத்துறை எவ்வித அறிவுறுத்தலும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து இன்று (5-ம் தேதி) திறக்கப்படும் நீரின் மூலம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 24 ஆயிரத்து 500 ஏக்கரும், காலிங்கராயன் கால்வாய் பாசனப்பகுதியில் 15 ஆயிரத்து 743 ஏக்கரும், கீழ்பவானி பாசனத்தில் இரட்டைப்படை எண் கொண்ட மதகுகளுக்கான ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறவுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பாசனத்திற்கு முறையாக நீர் திறக்கப்படாத நிலையில், தற்போதைய நீர் திறப்பு விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், நீர் திறக்கப்படும் பருவம், கால இடைவெளி, மழைப்பொழிவு, நீரின் அளவு இவற்றிற்கு ஏற்ப எவ்வகையான பயிர்களை பயிரிடலாம் என வேளாண்மைத்துறை எவ்வித பரிந்துரையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதன்காரணமாக எந்த பயிரை பயிரிடலாம் என்ற குழப்பமும் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு குறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவர் சுபி.தளபதி கூறும்போது, எங்களது பாசனப்பகுதியில் நெல் பட்டத்திற்கு இது உரிய காலமாகும். டிசம்பர் முதல் ஜனவரி வரை பனி மூட்டம் அதிகமாக இருக்கும். இக்காலம் பால் பிடிக்கும் பருவம் என்பதால், பதர் அதிகமாகும். எனவே முதல் போகத்துடன் ஒப்பிடும்போது, நெல் அறுவடை குறையும். இருப்பினும் அணையில் தற்போதைய நீர் இருப்புடன் பருவமழையும் பெய்யுமானால், இரண்டாம் போக நெல் அறுவடையை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
முறைப்படியான காலத்தில் நீர் திறப்பு இல்லாமல், தற்போது அணையில் இருக்கும் நீரை பகிர்ந்து கொடுத்துள்ளனர். இந்த நேரத்தில் என்ன பயிரை பயிரிடலாம் என வேளாண்மைத்துறை எவ்வித தகவலும் விவசாயிகளுக்கு சொல்லவில்லை. பவானி ஆற்றிலும், வாய்க்காலிலும் 460 இடங்களில் முறைகேடாக நீர் திருடப்படுகிறது என பொதுப்பணித்துறையிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றார்.
காலிங்கராயன் பாசனசபை செயலாளர் குழந்தைவேலு கூறும்போது, காலிங்கராயன் பாசனத்தை மூன்று மண்டலமாக பிரித்து முறைப்பாசனத்திற்கு நீர் வழங்க வேண்டும். ஆனால், தற்போது அவ்வாறு நீர் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் எங்கள் கோரிக்கையை ஏற்று நீர் திறந்து இருந்தால், குறைந்தபட்சம் 2000 ஏக்கரிலாவது மஞ்சள் பயிரிட்டு இருக்க முடியும்.
தற்போது, விவசாயிகளிடம் விதை மஞ்சள் கூட இருப்பு இல்லாத நிலைதான் நிலவுகிறது. எனவே, சில இடங்களில் நெற்பயிரும், பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம், தீவனச்சோளம் இவற்றையே பயிரிடவுள்ளனர். தங்கள் வசம் இருக்கும் கால்நடைகளை காக்க இது உதவும் என்றே நம்புகின்றனர், என்றார்.
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் நல்லசாமி கூறும்போது, ‘நீர் திறப்பை வரவேற்கிறோம். ஆனால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி விகிதாச்சாரம் இப்போதும் பின்பற்றப்படவில்லை. கீழ்பவானி பாசனத்தில் உள்ள ஒற்றைப்படை எண் மதகு கொண்ட ஒரு லட்சத்து 3500 ஏக்கருக்கு கடந்த ஆண்டும் உயிர் நீர் விடவில்லை. இந்த ஆண்டும் நீர் திறக்கப்படவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.
அதற்கு முந்தைய காலங்களில் எங்களுக்கு வழக்கப்பட்ட 36 டிஎம்சி நீரில் நெல், கடலை என இரு போக சாகுபடி முறையை பின்பற்றினோம். தற்போது, நடுவர் மன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான நீரின் அளவு 28 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாகும். இதுகுறித்து வேளாண்மைத்துறை எவ்வித கவலையும் படவில்லை. எவ்வித அறிவுரையும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago