காவிரி மேலாண்மை வாரியம்.. தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு

By டி.எல்.சஞ்சீவி குமார்

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 23 நாட்கள் ஆகியும், காவிரியின் கடைமடையான கொள்ளிடத்துக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. நடவு வேலைகளை முடித்து தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இது சோதனையான காலம். ஏற்கெனவே அடி மேல் அடி வாங்கி இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக இந்த விஷயத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. சமீபத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய நீர்வளத் துறை அனுப்பிய கடிதமே இதற்கு சாட்சி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிநீர் இணைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு மத்திய நீர்வளத் துறைக்கும், பிரதமர் மோடிக்கும் கடந்த ஜூலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடி தம் எழுதினார். அதற்கு சமீபத்தில் பதில் அளித்துள்ள நீர்வளத் துறை, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு 2016 செப்டம்பர் 20-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்டோபர் 4-ம் தேதி அந்த உத்தரவு தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் டிசம்பர் 9-ம் தேதி இரு மாநிலங்களும் இந்த விஷயத்தில் இருவேறான நிலைப்பாடுகளை எடுத்து மனு தாக்கல் செய்துள்ளன. மேலும் 2007-ல் காவிரி நதிநீர் பகிர்வு தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவின் மீதான வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை’ என விளக்கெண்ணெயில் தோய்த்த வெண்டைக்காயை போன்ற பதிலை அனுப்பியிருக்கிறது.

இந்தக் கடிதம் வந்ததும், ‘தி இந்து’வை தொடர்புகொண்ட ராதாகிருஷ்ணன், ‘தமிழக மக்களை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தையே மத்திய அரசு ஏமாற்றுகிறது. இதை எல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?’ என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததற்காக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்துவந்த நிலையில் இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது மத்திய நீர்வளத் துறை.

இதுதொடர்பான வழக்கு 2016 அக்டோபரில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றம் வரம்பு மீறி உத்தரவிடுவதால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 252 மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான 1956 நதிநீர் பங்கீட்டுச் சட்டப் பிரிவு 11-ன் படி நாடாளுமன்றம்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க முடியும். காவிரி நடுவர் மன்றப் பரிந்துரையை ஏற்பதா, மறுப்பதா என்பது பற்றியும் மத்திய அரசும் நாடாளுமன்றமும்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

அதற்கு சில நாட்கள் முன்பு தான் இதே மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றது. இதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, “வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டது தவறுதான். சட்டப் பிரிவுகள் குறுக்கிடுவதால் இப்போது இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்” என்றது மத்திய அரசு. தேவகவுடா உண்ணாவிரதம் உட்பட அப்போது கர்நாடகாவில் நடந்த சில அரசியல் நகர்வுகளே மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்பதே உண்மை.

இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிற தனது நிலைப்பாட்டை முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியது மத்திய பாஜக அரசு. கடந்த செப்டம்பரில் நடந்த விசாரணையின்போதும், “இது மாநில அரசுகள் இடையிலான பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இதில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என மத்திய அரசு தெரிவித்தது. அப்போதும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வைக்கும் வாதங்களுக்கு பதில் தந்திருக்கிறது தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம். பொறியாளர்களான கார்கில் சுப்பிரமணியம், வீரப்பன், முன்னாள் நீதிபதி ராஜன் கூறும்போது, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ம் தேதி அரசுக்கு அளிக்கப்பட்டது. இது 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2013 பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசு அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நடுவர் மன்றத் தீர்ப்பு பற்றி மத்திய அரசு மறுப்பு, குறிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிட்டதாலேயே, நடுவர் மன்ற அறிக்கையை மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகவே பொருள். எனவே, பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 மற்றும் அரசியல் சாசனச் சட்டம் 144-ன் படி காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற ஆய்வின்றியே அமைக்க முடியும். நர்மதா நதி கட்டுப்பாடு ஆணையம் 1979-ல் அரசிதழில் வெளியிடப்பட்ட மறு ஆண்டே அமைக்கப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணா மேலாண்மை வாரியங்களும் 2013-ல் நடுவர் மன்ற தீர்ப்பு வந்த 6 மாதங்களில் அமைக்கப்பட்டது. இதற்காக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

உண்மை இப்படி இருக்க அரசியல் ஆதாயங்களுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது” என்றனர்.

இத்தனை நாளாக காவிரி நீர் தமிழகத்துக்கு கிடையாது என்று கர்நாடகா மட்டுமே கூறியது. இப்போது மத்திய அரசும் சொல்கிறது என்பது கசப்பான உண்மை. இதை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகி றது என்பதைப் பொறுத்தே தமிழக விவசாயத்தின் எதிர்காலம் அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்