ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? - ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

By எஸ்.விஜய்குமார்

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கண்டறிய முடியாமல் சிபிஐ திணறி வருகிறது.

ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள், அங்கிருந்து பல்வேறு வங்கிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

இதற்கிடையே தொழிலதிபர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பெருமளவு பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகளும் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்து வருகின்றனர். எனினும் இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி தரப்பினருக்கு எவ்வாறு கிடைத்தன என்பதை கண்டறிவதில் சிபிஐக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு மிக்க அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து ரிசர்வ் வங்கியின் பணக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு, பின் வங்கிகளுக்கு அவை விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வங்கிகளுக்கு விநியோகம் செய்வதற்காக பல்வேறு பணக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை ரிசர்வ் வங்கி குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வருகிறது.

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எந்த பணக் கிடங்கு வழியாக வந்திருக்க வேண்டும் என்று விசாரிப்பதற்காக ரிசர்வ் வங்கியை சிபிஐ அணுகியபோது, இவ்வாறு வரிசை எண்களை குறித்து வைக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று டிசம்பர் 2-வது வாரம்தான் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. பணக் கிடங்குகளிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட புதிய 2 ஆயிரம் நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகள் தொடக்கத்தில் பராமரிக்கப்படாதது தற்போதைய சிபிஐ விசாரணைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

“ஏராளமானோரிடம் நடத்திய விசாரணை மற்றும் பல ஆவணங்களை ஆராய்ந்ததில், குறிப்பிட்ட காலத்தில் சேகர் ரெட்டி தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் இருந்து இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அச்சகங்களில் ஆராய்ந்ததில், அரசுப் பணக் கிடங்குகள் வரை மட்டுமே புதிய ரூபாய் நோட்டுகள் சென்று சேர்ந்த விதம் பற்றிய தகவல்கள் உள்ளன. புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் பற்றி பணக் கிடங்குகளுக்கு அப்பால் எவ்வித தகவல்களும் சேகரிக்க முடியவில்லை” என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

“சேகர் ரெட்டி தரப்பினருக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்த விதத்தை நிரூபணம் செய்வது மட்டுமின்றி, சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் பழைய ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி தரப்பினர் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக மாற்றினர் என்பதையும் நிரூபிப்பதில் சிபிஐ-க்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது” என்று மூத்த புலன் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்