தமிழகத்தில் 2-வது இதய மாற்று அறுவை சிகிச்சை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாகவும், தமிழக அளவில் அரசு மருத்துவமனைகளில் 2-வது முறையாகவும் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது.

5385 உறுப்புகள் தானம்

தமிழகத்தில் மூளைச்சாவு உறுப்பு தானம் மாற்று அறுவை சிகிச்சை திட்டம், கடந்த 2008 அக்டோபர் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை 964 பேர் மூளைச்சாவால் இறந்தவர்களின் உறுப்புகளை அவர்களுடைய உறவினர்கள் தானமாக அளித்துள்ளனர். இதன் மூலம் 1749 சிறுநீரகங்கள், 907 கல்லீரல், 308 இதயங்கள், 1466 கண்கள் உட்பட மொத்தம் 5385 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

அந்த உடல் உறுப்புகள் 90 சதவீதம், வசதி படைத்த தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்ததாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 2018 ஜனவரிக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அதன் எதிரொலியாக, இந்தாண்டு சிறுநீரகம் தானமாக கிடைக்கப் பெற்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல் முறையாக சிகிச்சை பெற்ற நோயாளிக்கு இலவசமாக பொருத்தப்பட்டது.

நேற்று சென்னையை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதயம் தானமாக கிடைக்கப் பெற்று ஏழை நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

தனி ஆம்புலன்ஸில் வந்த இதயம்

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் எஸ். வெங்கடேஷ் கூறியதாவது:

உசிலம்பட்டியைச் சேர்ந்த சவுந்தரபாண்டி (46) என்பவர் இதயக் கோளாறு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயம் சரியாக செயல்படாததால், மாற்று இதயம் பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், இவருக்கு மாற்று இதயம் கேட்டு தமிழ்நாடு உறுப்பு தானம் ஆணையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், ராமநாதபுரம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவரது மகன் முருகேசன் (25) கடந்த 18-ம் தேதி விபத்தில் படுகாயமடைந்தார்.

19-ம் தேதி அவர், மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். நேற்று பிற்பகல் அவரது உடலிலுள்ள உறுப்புகளை முருகேசனின் பெற்றோர் தானம் செய்ய முன்வந்தனர். அதனால், இவரது இதயத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உசிலம்பட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டிக்கு (46) பொருத்த, உடனே ஏற்பாடு செய்தோம். முருகேசனின் இதயத்தை ஆய்வு செய்த மதுரை அரசு மருத்துவமனை குழு, அவரது இதயத்தை சவுந்தரபாண்டியனுக்கு பொருத்த முடிவு செய்தது. அதன்படி வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து தனி ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு இதயம் கொண்டு வரப்பட்டது.

அரசு ராஜாஜி மருத்துவமனை இதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் ரத்தினவேலு தலைமையில் 10 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும், மயக்கவியல்துறை இயக்குநர் ஆசீர்வாதம் தலைமையில் 10 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும் நேற்று மாலை 4 மணி நேரம் போராடி வெற்றிகரமாக சவுந்தரபாண்டியனுக்கு மாற்று இதயத்தை பொருத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை டீன் (பொறுப்பு) மருதுபாண்டியன் பாராட்டினார்.

8 நிமிடத்தில் வந்த இதயம்

வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இதயத்தை பாதுகாப்பாகவும், விரைவாகவும் எடுத்துவர ‘ரிங்’ ரோட்டில் இருந்து அரசு மருத்துவமனை வரை வழிநெடுகவும், ஆம்புலன்சுடன் வந்த போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி ஒத்துழைத்தனர். அதனால், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உதயகுமார் 8 நிமிடங்களில் வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இதயத்தை கொண்டு வந்து சேர்த்தார்.

50 ஆண்டுகள் காத்திருந்த மதுரை

உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை, தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்தது. டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்டு மற்றும் அவரது குழுவினரால் 1967-ம் ஆண்டு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 1994, ஆகஸ்ட் 3-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

அதன்பிறகு, சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது மதுரையில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதற்காக தென் மாவட்ட மக்கள் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து இதுபோன்று ஏழை நோயாளிகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் மதுரை மட்டுமில்லாது தென் தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்