“எங்கள் காத்திருப்புக்கு முடிவே இல்லையா?” - மோசமான சாலைகளால் அவதியுறும் பொன்னேரி மக்கள்

By ச.கோகுல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ரூ.54 கோடியே 78 லட்சத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதோடு, தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமலும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்த சாலைகளில் வாகனங்கள் சென்று வர முடியாததால், நோயாளிகள் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு சென்று திரும்புவது சிரமமாக உள்ளது. குறிப்பாக, பொன்னேரி அரசுப் பொது மருத்துவமனை, ரயில் நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள், நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்தச் சூழலில் நீண்டநாள் நடந்து வரும் இத்திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொன்னேரியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறும்போது, “நான் 1977-ல் இருந்து பொன்னேரியில்தான் வசிக்கிறேன். அந்தக் காலத்தில் செம்மண் சாலைகள்தான் இருந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளை அமைத்தனர். அது நன்றாக இருந்தது. பின்னர் பாதாள சாக்கடை திட்டம் என்றுகூறி சாலைகளைத் தோண்டி போட்டனர். இதனால் சாலைகள் மேடு பள்ளங்களாக உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவசர காலத்தில்கூட ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறது. எனவே அரசு பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடித்து சாலைகளை அமைத்து தர வேண்டும்” என்று கூறினார்.

அப்பகுதியில் வசிக்கும் பத்மா என்பவர் கூறும்போது, “இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது சிதறும் கற்கள், அந்த வழியாகச் செல்லும் மக்களின் மீது விழுக்கின்றன.இதனால், சில நேரங்களில் வாகனங்களும்கூட தடுமாறி கீழே விழுந்தது விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலைகளை அமைக்கப்படும் என்றுகூறி இருந்தார்கள். ஆனால் இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, சாலைகளை விரைவில் அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

பால்ராஜ் பென்ஜமின், பத்மா, ராமச்சந்திரன்

பொன்னேரியை சேர்ந்த பால்ராஜ் பென்ஜமின் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அவசரத் தேவைக்கு செல்ல முடியவில்லை. மேலும் மழைக் காலத்தில் இந்த சாலைகளில் செல்வது சிரமமாக இருக்கிறது. எனவே, இந்த சாலைகளை அரசாங்கம் விரைவில் சரி செய்து தர வேண்டும்”என்று கூறினார்.

Loading...

மேலும், இதே நிலைதான் என்.ஜி.ஓ நகர் பகுதியிலும் நீடிக்கிறது என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மக்களின் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு அரசு பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொன்னேரி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE