புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி, செந்திலாபாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. அவர் ஓர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரியிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது.
மேலும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லாமல் அங்கேயே வைத்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்றாகும். எனவே, செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு இன்றே விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத் துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று தெரிவித்திருந்தனர்.
» உலகில் தனக்கான சரியான இடத்தை நோக்கி இந்தியா நகர்கிறது: பிரதமர் மோடி
» மரச்சிற்பங்களை செதுக்கிய கலைக்கு ஓய்வா? - வேலூர், தி.மலையில் வாழ்வாதாரத்தை இழக்கும் கலைஞர்கள்
கேவியட் மனு: அமலாக்கத் துறை செந்தில்பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அமலக்கத்துறை மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் நிலையில் தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி: அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தர்மராஜ், ஒய்.பாலாஜி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அமலாக்கத் துறையும் தங்களது தரப்பு விசாரணையை நடத்த அனுமதியளித்து மே மாதம் 16-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, கடந்த 14ம் தேதி அவரை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அரசு மருத்துவக்குழு பரிந்துரைத்தது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்ற சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago