தினமும் 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை - நோயாளிகளை ‘சோதிக்கும்’ பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை

By சி.கண்ணன்

சென்னை: தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்றோர், அவர்களின் குடும்பத்தினர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களும் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால், அதே பகுதியில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் ரத்த பரிசோதனை மையம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தினமும் 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை செய்யப்படுவதால், நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இது தொடர்பாக நோயாளிகள் கூறியதாவது: பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அனைத்து நோய்களுக்கும் இங்குதான் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, சிறுநீரகம் பாதிப்பு, டயாலிசிஸ் செய்பவர்கள், இதயபிரச்சினை, புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோயாளிகள் மாதத்துக்கு ஒரு முறை புறநோயாளிகள் பிரிவுக்கு சென்று ரத்த பரிசோதனை செய்துவிட்டு, மருத்துவர்களை பார்த்து சிகிச்சை பெறுகின்றனர்.

கரோனா காலத்துக்கு முன்பு வரைமருத்துவமனையின் பழைய புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகள் அனைவருக்கும் தனியாக ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. கரோனா காலத்தில் இந்த நோயாளிகளுடன், மற்ற நோயாளிகளுக்கும் சேர்த்து ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால், கரோனா காலத்துக்கு பின்னர், புதிதாக திறக்கப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் 2-வதுமாடிக்கு ரத்த பரிசோதனை மையம் மாற்றப்பட்டது. ஊழியர்கள் பற்றாக்குறையால், இந்த புதிய புறநோயாளிகள் பிரிவில் தினமும் 50 பேருக்கு மட்டுமே ரத்தபரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காலை 8 மணி அளவில் ரத்த பரிசோதனை செய்யும் பணி தொடங்குவதால் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, சூலூர்பேட்டை, தடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 4 மணிக்கே வந்து நோயாளிகள் காத்திருக்கின்றனர். 50 பேரை மட்டும் அனுமதித்துவிட்டு, மற்றவர்களை மறுநாள் வருமாறு திருப்பி அனுப்பிவிடுகின்றனர். தொலைதூரத்தில் வரும் நோயாளிகள் அங்கேயே தங்கி மறுநாள் பரிசோதனை செய்கின்றனர்.

தொடர் சிகிச்சையில் இருக்கும் இந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பதால், அவர்களால் ரத்த பரிசோதனைக்கு அதிகாலையிலேயே வரமுடிவதில்லை. உரிய நேரத்தில் மருத்துவர்களை பார்த்துசிகிச்சை பெற முடியாமல் வயதான நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தினமும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, மாதம் ஒருமுறை இருந்த ரத்தபரிசோதனை, இரு மாதங்களுக்கு ஒருமுறையாக மாற்றப்படுகிறது.

அதனால், ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை என்பதை கைவிட வேண்டும். முன்பு போல், மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு தேவையான டெக்னீசியன்களை நியமிக்கவேண்டும். பழைய கட்டிடத்தில் இருந்ததை போல், இயந்திரம் மூலம் டோக்கன் வழங்கலாம்.

நோயாளிகளுக்கென்று தனித்தனி பதிவு எண் உள்ளது. நோயாளிகள் பதிவு எண் மூலமாக மருத்துவர்களை சந்திக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை கொண்டு வரலாம். இந்த புதிய கட்டிடத்தில் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெந்நீர் வசதி இல்லை. கழிப்பறைகள் சுத்தமாக பராமரிப்பில்லை. அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

தொலை தூரத்தில் இருப்பவர்கள் இந்த மருத்துவமனையில் வந்து டயாலிசிஸ் செய்து கொள்ள சிரமம் இருந்தது. அதனால், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே டயாலிசிஸ் செய்வதற்காக சில தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோயாளிகள் இலவசமாக தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர்.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நோயாளிகளுக்கு வாரத்துக்கு இருமுறை 20 கிமீ, 25 கிமீ வரை சென்று டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது. காவேரி மருத்துவமனையின் கிளை கோவிலம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவேரி மருத்துவமனையுடன் ஒப்பந்தம் இருப்பதால், கோவிலம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அதன் கிளை மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தவைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது: பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை மற்றும் புதிய கட்டிடத்தில் 8 ஒப்பந்தப் பணியாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு,பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். இதன் பிறகு, மாற்று பணியாளர்கள் நியமிக்கவில்லை.

இதனால், ரத்தப் பரிசோதனை நடத்த பணியாளர்கள் இல்லை. இதன்காரணமாக, தினசரி குறைவான நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர தாம்பரம், ஆவடி ரயில்வே மருத்துவமனையில் ரத்த மாதிரி எடுக்க ஆய்வகம், போதிய ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.

எனவே, அங்கிருந்து பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு ரத்த மாதிரி எடுக்க அதிக நோயாளிகள் வருகின்றனர். இங்கு குறைவான நபர்களுக்கு மட்டும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால், அவர்கள் மிகுந்த இன்னல்களை சந்திக்கின்றனர்.

இதுதவிர, மருத்துவமனையில் உணவகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இதை கண்டித்து பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை முன்பாக, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி யூனியன் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தவறான தகவல்: ரத்தப் பரிசோதனை 50 பேருக்கு மட்டுமே எடுக்கப்படுவது தொடர்பாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் கல்யாணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது முற்றிலும் தவறான தகவல். பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு வருகின்ற எல்லா நோயாளிக்கும் ரத்த சோதனை மேற்கொள்கிறோம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மட்டும் காலை9.30 மணிக்குள் பரிசோதனை செய்ய அறிவுறுத்துகிறோம்” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்