ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்களில் தூர் எடுக்க ரூ. 20 கோடி: அமைச்சர் சேகர்பாபு பேட்டி 

By செய்திப்பிரிவு

சென்னை: ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் தூர் எடுக்க ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 6 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள மக்காரம் தோட்டத்தில் நடைபெறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கியது. அந்த பகுதிகளில் காலை 11 மணிக்குள் இயல்பு வாழ்க்கை திரும்பியது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குடிசை பகுதிகளில் மழை காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடாது என்பதற்காக மண்டலத்திற்கு 6 முகாம்கள் என்ற அளவில் மொத்தம் 90 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று சென்னை முழுவதும் நடைபெறுகின்றன. கூடுதலாக சென்னை முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களிலும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு புதிதாக 70 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 30 கி.மீ மேல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முழுவதும் வரும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்கப்படும். இந்த மழையில் சென்னையில் 30 மரங்களும், 6 பெரிய மரங்களும் விழுந்துள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டன. மழைக்காலத்தில் பணியாற்ற மாநகராட்சி தயாராகவே உள்ளது. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மாநகராட்சி உதவி எண் 1913 வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரிய பணியாளர்கள் களத்தில் பணியாற்ற தயாராக உள்ளனர்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு சென்றாலும், முதல்வரின் எண்ணங்கள் சென்னையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தே உள்ளது. சென்னையில் உள்ள அமைச்சர்கள், மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவினை காணொளி வாயிலாக பார்வையிடுங்கள்; திருவாரூர் வர வேண்டாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மழை விட்ட பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்குள் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்படும். ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் தூர் எடுப்பதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓட்டேரி கால்வாயை அகலப்படுத்துவற்கான சாத்திய கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE