சென்னை: தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கேரளா, கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்யாத போது தமிழகப் பகுதியில் மழை வாய்ப்புகள் அதிகரிக்கும். அவ்வாறு சென்னை, புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை இரவு தொடங்கிய மழை, திங்கள் கிழமை காலை வரை இடைவிடாது கனமழையாக கொட்டி தீர்த்தது.
இதனால் வட சென்னையில் புளியந்தோப்பு, பட்டாளம் சாலைகள், வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாலம், பெரம்பூர் ரயில் நிலைய சுரங்கப் பாலம், ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மத்திய சென்னையில் கிண்டி கத்திபாரா சுரங்கப் பாதையிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தென் சென்னையில் ராஜீவ் காந்தி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தரமணி, ஆலந்தூர், புரசைவாக்கம் போன்ற பகுதிகளிலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செமீ, தரமணி, ஆலந்தூரில் தலா 14 செமீ, செம்பரம்பாக்கத்தில் 11 செமீ, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செமீ, மேற்கு தாம்பரம், குன்றத்தூர், டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 9 செமீ,
கொரட்டூர், எம்.ஜி.ஆர் நகரில் தலா 8 செ.மீ, காட்டுக்குப்பம், பூந்தமல்லி, தாம்பரம், சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ, அயனாவரம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, புழல், மாமல்லபுரம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ,
சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மாதவரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ, கேளம்பாக்கம், திருவள்ளூர், எண்ணூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அமைச்சர் ஆய்வு: வடசென்னை பகுதியில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அவருடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மாநகராட்சி இணை ஆணையர் சமீரன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது: நீர் இறைக்கும் பணி - சென்னையில் பெய்த கனமழையால் 83 இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. 25 இடங்களில்நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையில் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன.
அவற்றில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, கத்திபாரா சுரங்கப்பாதையில் மட்டும்நீர் தேங்கின. அந்த நீர்வடிக்கப்பட்டுவிட்டது. மழை காரணமாக மரக்கிளைகள் மற்றும் மரங்கள் விழுந்ததாக 48 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 40 புகார்கள் மீதுஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் மொத்தம் 4 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெற ரிப்பன் மாளிகைமற்றும் 15 மண்டல அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 1700-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாட்டில் மேயர், ஆணையர்: மேயர் ஆர்.பிரியா, துணை மேயர்மு.மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்காகச் சென்றுள்ளனர். ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், தனது தொடர் கல்வியை மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சென்னையில் மழை நிவாரணப் பணிகளை கவனிக்க மேயரும், ஆணையரும் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த மழையால் மோசமான வானிலை: 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன - சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உட்பட 10 நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் மோசமான வானிலையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. மோசமான வானிலை நீடித்ததால் 10 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
பின்னர், மழை குறைந்து வானிலை சீரானதும், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. ஒரே நேரத்தில் பல விமானங்கள் தரையிறங்கியதால் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10 இடங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் 3 முதல் 6 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago