முதல்வர் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - பண்ருட்டி விபத்துக்கு காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மேல் பட்டாம்பாக்கத்தில் நேற்று தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 95 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலையில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 10 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பண்ருட்டியை அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே சென்றபோது பேருந்தின் முன்புற டயர் வெடித்ததில், கடலூரிலில் இருந்து - பண்ருட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

அங்கிருந்த பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய பேருந்து ஓட்டுநரை தீயணைப்பு படை வீரர்கள், கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரம்
உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லிக்குப்பம் போலீஸார் விபத்தில் உயிரிழந்த நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் அங்காளமணி(33), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன்(49), திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த முருகன்(50), கவரப்பட்டைச் சேர்ந்த தனபால்(50) ஆகியோரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி, கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 95 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புதுச்சேரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பண்டரக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன் (79) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், கடலூர் எம்எல்ஏ கோ. ஐயப்பன், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், எஸ்.பி. ரா.ராஜாராம் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

காரணம் என்ன?: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 முதல் 11 மணி வரை கடலூருக்கான அரசு பேருந்து சேவை மிகக் குறைவு. அந்த நேரத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் வருமானத்தைக் கணக்கில் கொண்டு அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு, மிகுந்த பாட்டுச் சத்தத்துடன் அதிவேகமாக கடலூர் சாலையில் பயணிக்கின்றனர். நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், தனியார் பேருந்து ஊழியர்கள் கல்லூரி மாணவ, மாணவிகளை அதிக அளவில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றதும் விபத்துக்கு காரணம் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நொறுங்கி கிடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE