தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.

மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு, சென்னை அண்ணாசாலை யில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், அனைத்து தலைமைப் பொறியாளர்களுடன் முதல் ஆய்வுக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.

இக்கூட்டத்தில், மின் தேவை, அனல், புனல் மற்றும் எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு குறித்தும், நடைபெற்று வரும் மின்னுற்பத்தி திட்டங்கள் மற்றும் மின்தொடரமைப்புத் திட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். பருவமழைக் காலத்தில் மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மண்டல தலைமைப் பொறியாளர்களை கேட்டுக் கொண்டார். மின்நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் ரா.மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE