அரசு இணையதளத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இடம்பெற்றார் செந்தில் பாலாஜி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு இணையதளத்தில் உள்ள அமைச்சர்கள் பட்டியலில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2011-16-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரும் எழுந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து ஆதாரங்களைத் திரட்டியது.

இந்நிலையில், கடந்த ஜூன் 13-ம்தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அன்றிரவே அவரைக் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சு.முத்துசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கான பரிந்துரையில் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். ஆனால், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்கவில்லை. இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்து தமிழக அரசு நிர்வாக ஆணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அமைச்சரவைப் பட்டியலில், இலாகா மாற்றங்கள் செய்யப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பட்டியலிடப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE