தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 20-ம்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் 21-ம்தேதி ஒருசில இடங்களிலும், 22, 23 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

27 ஆண்டுகளுக்கு பிறகு..: 19-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது பதிவாகி இருப்பது, கடந்த 73 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான 2-வது அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு 25 செமீ மழை பதிவாகி இருந்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மீண்டும் கனமழை பெய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தற்போது பதிவாகி இருப்பது, 3-வது அதிகபட்ச மழையாகும். கடந்த 1996-ம் ஆண்டு 34 செமீ, 1991-ம் ஆண்டு 18 செமீ, தற்போது 9 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தரமணி, ஆலந்தூரில் தலா 14 செமீ, செம்பரம்பாக்கத்தில் 13 செமீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செமீ, செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை டிஜிபி அலுவலகம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை, கொரட்டூர், எம்ஜிஆர் நகரில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE