திருவாரூரில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பிஹார் முதல்வர் நிதிஷ், துணை முதல்வர் தேஜஸ்வி பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் திறந்து வைக்கின்றனர். விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகின்றனர். அங்கிருந்து கார் மூலம் காட்டூர் வந்து, விழாவில் பங்கேற்கின்றனர்.

விழாவையொட்டி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவே திருவாரூர் வந்து, சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார்.

நேற்று காலை அங்கு கூடியிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், காட்டூர் சென்று, கலைஞர் கோட்டம் திறப்பு விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.

பின்னர், திருவாரூர் அடுத்த விளமல் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வரிடம் ஆட்சியர் சாருஸ்ரீ விளக்கினார். டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டிஆர்பி ராஜா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE